வாடிக்கையாளரின் "பிக்சட் டெபாசிட்" பணத்தை நூதன முறையில் திருடிய நண்பர்கள் கைது
சென்னையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து, நிதி நிறுவனத்தில் ஒன்றாக வேலைக்கு சேர்ந்து, வாடிக்கையாளரின் பிக்சட் டெபாசிட் தொகை 75 லட்ச ரூபாயை நூதன முறையில் கையாடல் செய்த நண்பர்களை, போலீசார் கைது செய்தனர்.
மாயா அரவிந்தாக்ஷன் என்ற 80 வயது பெண்மணி, பி.என்.பி ஹவுசிங் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் 75 லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட் வைத்துள்ளார். அமெரிக்காவில் மகன் வீட்டில் வசித்த அவர் கடந்தாண்டு உயிரிழந்தார்.
ஈமச்சடங்கிற்காக மகன் சந்திரசேகர் சென்னை வந்த போது, தாயார் பெயரில் IDFC வங்கியில் இருந்து பாஸ்புக் வந்துள்ளது. அந்த வங்கியை அவர் அணுகிய போது, பி.என்.பி ஹவுசிங்-கில் இருந்த அவரது தாயாரின் பிக்சட் டெபாசிட் தொகை, IDFC வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் பி.என்.பி ஹவுசிங்-கை அணுகிய போது, ஏற்கனவே அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பிக்சட் டெபாசிட் பிரிவின் மேலாளர் ராஜா சுந்தர் மற்றும் மக்கள் தொடர்பு மேலாளர் ஹக்கீம் பணத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த ராஜாசுந்தர் மற்றும் ஹக்கீமை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். விசாரணையில், இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள் என்பதும், ஆடம்பரமாக வாழ ஆசை பட்ட ராஜா சுந்தருக்கு ஏராளமான கடன்கள் இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் வசித்த மாயா அரவிந்தாக்ஷன் தனது பிக்சட் டெபாசிட்டை புதுப்பிக்குமாறு ராஜா சுந்தரிடம் தெரிவித்துள்ளார். அவரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்தை பெற்ற ராஜா சுந்தர், அதன் மூலம் மாயாவின் பெயரில் IDFC வங்கியில் புது கணக்கை தொடங்கி, பி.என்.பி-யில் இருந்த பிக்சட் டெபாசிட் தொகை 75 லட்ச ரூபாயை அந்த வங்கி கணக்கிற்கு மாற்றி பணத்தை வெளியே எடுத்துள்ளது தெரியவந்தது.
Comments